யோகம்

சுபம் (சுப):-
பெயரே சுபம் என்பதால் சுபமான யோகம் தான். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். மகான்கள், யோகிகள், ஞானிகள், பெரியோர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். தெய்வ காரியங்கள், திருப்பணிகள், பொது சேவையிலும் நல்ல நாட்டமிருக்கும். அனைத்து தரப்பினரிடமும், சுமுகமான உறவு வைத்துக் கொள்பவர்கள். அமைதியை நாடும் சாத்வீகமானவர்கள் எனலாம்.

சுப்பிரம் (சுப்):-
இது சுபமான யோகமாகும். நல்ல தெய்வபக்தியும், தெய்வ நம்பிக்கையும் உடையவர்கள். எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கூறுவார்கள். அனைத்துக்குமே இவர்களுக்கு கடவுள் தான். தான் எந்த சாதனை செய்தாலும் தன்னைப் பற்றி பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொள்ள மாட்டார்கள். அதையும் கடவுளுக்கே சமர்ப்பணம் செய்வார்கள். மன உறுதியும், வைராக்கியமும் உடைய சாதனையாளர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். நல்ல தோற்றம். இனிமையான சுபாவம் உள்ளவர்கள்.

யோகம்

சித்தம் (சித்):-
இது சுபமானயோகமாகும். இதில் பிறந்தவர்கள். அசாத்தியமான மன உறுதியுடையவர்கள். எதற்குமே அஞ்சமாட்டார்கள். உறுதியான சித்தமுடையவர்கள். எடுக்கும் முடிவுகளை சட்டென்று மாற்றிக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திர புலமை, பரிச்சியமுடையவர்கள். நல்ல பக்தியும் இருக்கும். பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். பிறருக்குத் தகுந்த ஆலோசனைகளைச் சொல்ல கூடியவர்களாக இருப்பார்கள்.

சாத்தியம் (சாத்):-
இது சுபமான யோகமாகும். பெயரே சாத்தியம் என்று உள்ளதால், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையுமே சாத்தியமாக்கி விடுவார்கள். பிற பெண்களை வசியம் செய்து கொள்ளும் சாத்தியம் கூட இவர்களுக்கு உண்டு. சற்று கூடுதலான காம இச்சை உடையவர்கள் என்பதில் காமக்கலையில் வல்லவராகவும் கூட இருப்பதுண்டு. வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் பேசுவதில் கெட்டிகாரர்கள். இந்த பேச்சினாலேயே மற்றவர்களைக் கவர்ந்துவிடுவார்கள். சங்கீத ஞானமு இருப்பதுண்டு.

யோகம்

பரிகம் (பரி):-
இது சுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் தனக்கென தனியான கொள்கையும், குறிக்கோளும் உடையவர்கள். அநேகமாக அதிலிருந்து மாற மாட்டார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். பிறர் வாக்கு தவறினால் கோபம் கொண்டு அவர்களின் தொடர்பை வெட்டிக் கொள்வார்கள். கடும் முயற்சியுடையவர்கள். வெற்றி காணும் வரை ஓயமாட்டார்கள். விளையாட்டுகளில், பொழுதுபோக்குகளில் ஆர்வமுள்ளவர்கள். சுற்றுப் பயணத்தை விரும்புவார்கள்.

சிவம் (சிவ):-
இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் சிவனை வழிபடுபவர்களாகவும், தியானம், யோகம், பக்தி, ஞான மார்க்கத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். ஞானிகள், மகான்கள், யோகிகள், பெரியோர்களை சந்திப்பதில் அதிக ஆர்வமுடையவர்கள். அவர்களின் ஆசியும் வழிகாட்டுதலும் இவர்களுக்கு கிடைக்கும் தெய்வ காரியங்கள், திருப்பணிகள், தீர்த்த யாத்திரைகள் போன்றவற்றில் அதிக நாட்டமிருக்கும் நல்ல எண்ணமும், நல்ல செயல்பாடும் உடையவர்கள் எனலாம்.

யோகம்

வியதீபாதம் (விய):-
இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். துன்பங்களையும், துயரங்களையும், கஷ்டங்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன்யோசனையுடன் செயல்படாமல் அவசர முடிவால் பிரச்சினைகள் சந்திப்பார்கள். பிடிவாத குணம் உடையவர்கள் என்பதால் பல நல்ல வாய்ப்புகளை இழந்துவிடுவார்கள். செயல்பாட்டு உறுதியும், திறனும் இருப்பதில்லை.

வரீயான் (வரீ):-
இது சுபயோகமாகும். இதில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். நல்ல தைரியமும் காரிய வெற்றியும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனப்பான்மையுடையவர். தரும காரியங்கள் திருப்பணிகள் செய்வதில் நாட்டமிருக்கும் புகழ் பெறக்கூடிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். நல்லெண்ணம் நல்வாக்கு உடையவர்களாக இருப்பார்கள.

யோகம்

வஜ்ரம் (வஜ்):-
இது சுபமான யோகமாகும். இதை சிலர் அசுபமான யோகம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்களுக்கு அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனிவும் இருக்கும். உதவும் மனப்பான்மையும் உண்டு. நல்ல தெய்வபக்தியும், பிறர் மேல் மதிப்பு மரியாதையும் உள்ளவர்கள் தான் என்றாலும் தனக்கு தீங்கு செய்தவர்களை மறக்காமல் பழி தீர்த்து கொள்வார்கள்.

சித்தி (சித்):-
சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாசனா சக்தியுடையவர்கள். தியானம் - யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள். தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்வதில் விருப்பம் அதிகம். இமாலய யாத்திரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற்கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும் மனப்பான்மையுடையவர்கள் எனலாம்.

யோகம்

வ்யாகதம் (வ்யா):-
இதுவும் அசுபமான யோகம் தான். முன்கோபமும், முரட்டுத் தனமும் உடைய இவர்கள் சமுகத்தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாக செயல்படக் கூடியவர்கள். நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூதுவாது, கபடம் உள்ளவர்களே எனலாம். மனஉறுதி இல்லாத இவர்கள் எண்ணங்களையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். பழி பாவத்துக்கு அஞ்சாதவர்கள் கெடுதல் செய்வார்கள்.

ஹர்ஷணம் (ஹர்):-
இது சுபமான யோகமாகும். செல்வாக்கும் - சொல்வாக்கும் உடையவர்கள். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். பின்னால் வருவதை முன்கூட்டியே யூகிக்கும் தீர்க்கத் தரிசிகளாக இருப்பதுண்டு. சுகமான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். உடல் உறவு சுகத்தில் சற்று கூடுதலான அதிகமான ஈடுபாடுடையவர்கள். தெய்வ பக்தியும், உதவும் மனப்பான்மையும் உள்ளவர்களே எனலாம்.

யோகம்

விருத்தி (விரு):-
செல்வாக்குடையவர்கள். நல்ல அளவில் வசதியான வாழ்க்கை அமைப்பவர்கள். சாஸ்திர நாட்டமும், புலமையும் உடையவர்களாக இருப்பதுடன், தெய்வ பக்தியும், நற்பண்புகளும் உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடையவர்களாகவும், தெய்வ காரியங்கள் திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள். நல்ல எண்ணம் செயல்பாடுடையவர்கள் எனலாம். இது சுபமான யோகமாகும்.

துருவம் (துரு):-
இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பதுடன் எதிலும் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர் போல பட்டும், படாமலும் இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். சமயம் கிடைக்கும் போது பழிதீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல எண்ணம் இருக்காது. இது அசுபமான யோகமாகும். சிலர் இதையும் சுபயோகம் கூறுவதுண்டு. எனினும் சுபகாரியங்களுக்கு விலக்களிக்க வேண்டிய யோகம் தான்.